“தான் பரம தரித்திரன் என்ற மன நிலையில் வாழ்பவன் தன் மனித நிலையை அறியவோ, உணரவோ முடியாது. ஒருவன் பொருளாதார நலன்களைப் பெற்றாலன்றி அவனுடைய மனித உரிமைகளை மேற்கொண்டு வாழ இயலாது” – டாக்டர் அம்பேத்கர்.இந்திய நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் எண்ணிக்கை 10,42,81,034 ஆகும். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 7,94,697 (2011) இவர்களில் பெரும் பகுதியானவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
பத்து கோடிக்கு மேற்பட்ட இம்மக்கள் குறித்து அரசும், அதிகார வர்க்கமும் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் விடு தலை பெற்று 67 ஆண்டுகளுக்குப் பிறகும்கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும் இம்மக்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் இம்மக்கள் பின் தங்கியிருப்பதற்குக் காரணம் இதுகாறும் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளே!நிலப்பிரபுக்கள், மேல் சாதிஆதிக்க வெறியர்கள், காண்ட்ராக்டர்களால் இம்மக்கள் பல்வேறு ஒடுக்கு முறைகளுக்கு உள்ளானாலும், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை யினராலேயே மிக அதிகமான ஒடுக்கு முறைகளுக்கும், கொடுமைக்கும் உள்ளாக் கப்படுகின்றனர்.
உயிர் வாழும் உரிமை மனிதஉரிமைகளில் எல்லாம் முதன்மையான தும் மிகவும் புனிதமானதும் ஆகும். உயிர்வாழும் உரிமை என்பது ஏதோ மிருகம்போல் உயிருடன் இருப்பது என்றுமட்டுமல்லாமல் மனிதன் தன்மானத்து டன் உயிர் வாழ்வது என்றே பொருள்படும். தன்மானத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான இரண்டு அம்சங்கள் “சுதந்திரமும் வாழ்வதற்கான ஆதார வளங்களும்“ ஆகும். இதை இந்தியஅரசியலமைப்புச் சட்டமும் உறுதிசெய்கிறது. பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர்.
இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை.பின்னர் பிரிட்டிஷ் காலனி ஆட்சி துவங்கி 2005 வரை `மக்களிடமிருந்து காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கருத்துத் தளத்திலேயே அரசின் வனக்கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்பட்டு வந்தன.’பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் பறிக்கப்பட்டன.பழங்குடி மக்கள் காட்டை தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாக பயன்படுத்த ஆரம்பித்தது. 1854ம் ஆண்டு வெளி யிடப்பட்ட வனக்கொள்கை இதை வெளிப்படுத்தியது. “இந்திய வனச்சட் டம் 1927” மூலம் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது.
இத்தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத் தையும் சீர்குலைத்து சின்னாபின்ன மாக்கிவிட்டது.ஆதிவாசிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டது; காடுகளிலிருந்து அவர்கள் விரட் டப்பட்டனர். தாங்கள் தெய்வமாக வணங்கி பாதுகாத்த வனம் அழிக்கப்படுவது கண்டு கிளர்ந்தெழுந்த மக்களை ஒடுக்க 1871ல் குற்றப் பழங்குடியினர் சட்டம் பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றியது (Criminal Tribe Act) இச்சட்டத்தின் கீழ் 150 ஆதிவாசி குழுக்க ளைக் குற்றவாளிகளாக்கி பட்டியலிட்டது. சென்னை மாகாண குற்றப்பழங்குடிகள் சட்டம் 1911ம் ஆண்டு இயற்றப்பட்டது. 87 இனக் குழுக்களும் 3 கேங்குகளும் இதில் பட்டியலிடப்பட்டன. இனக்குழுக்களைக் குற்றவாளிகளாக்குவது பிரிட்டிஷ் ஆட்சி யில்தான் நடந்தேறியது. பரம்பரையையே குற்றவாளிகளாக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றது.
குறிப்பாக முத்துராமலிங்க தேவர், பி.ராம மூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி னர். 1952ம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப் பட்டது. ஆனால், இதற்குப் பதிலாக “வழக்கமாக குற்றத்தை மீறுவோர் தடுப்புச் சட்டம் (Habitual Offenders Restriction Act) என்ற பெயரில் 1959ம் ஆண்டு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி முன்னாள் குற்றம்பரம்பரையினரைப் பிடித்து தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். குற்றப்பின்னணி உள்ளவர் கள் என்ற காரணத்தைக் கற்பித்து பொய்வழக்கு, ஜோடிக்கப்பட்ட வழக்கு, குற்றத்தை ஒப்புக் கொள்ள கட்டாயப் படுத்துவது, அடித்துத் துன்புறுத்துவது, குடும்பத்துப் பெண்கள் அதிகாரிகளுக்கு இரையாக்கப்படுவது. உயிர் பறி போகும் காவல்நிலைய மரணங்கள் போன்ற கொடூரமான நடவடிக்கையில் காவல்துறையினரும், வனத்துறை யினரும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை பிடிபட்டால் பிறகு வாழ்நாள் முழுவதும் காவல்துறையால் அவர் கைது செய்யப்படுவார். மீளவே முடியாது.
இவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா இல் லையா என்பதைவிட இவர் இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பதே குற்றம் சுமத்த வும், கைது செய்யவும் போதுமானதாய் இருக்கிறது. குறிப்பாக குறவர், இருளர், கல் ஒட்டர் போன்ற சமூகத்தினர் இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின் றனர். அதிகாரம் படைத்த சமூகத்தினர் யார் நினைத்தாலும் இவர்களை எளிதாக குற்றவாளிகள் என முத்திரை குத்தி கொல்லவும் முடியும். இம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு, பொருளாதார மேம்பாட் டுக்கு எதுவும் செய்யாதவர்கள், குற்றம்சுமத்த மட்டும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். மற்றவர்களை குற்றவாளி என்று கூறுவதன் மூலம் தங்க ளைக் குற்றமற்றவர்களாகவும், நீதிமான் களாகவும் காட்டிக் கொள்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, ஆதிவாசி மக்கள் பெரும்பகுதியானவர்களின் வாழ்வாதாரம் நிலம் சார்ந்ததாகும். மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரிகள் ஆண்ட மேற்குவங்கம், கேரளா, திரிபுரா தவிர வேறுமாநிலங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக ஆதிவாசிகளுக்கு நிலம் வழங்க வில்லை. மாறாக, நிலம் வெளியேற்றம்தான் நடைபெற்றுள்ளது. நிலவெளியேற்றத்தை மேலும் தீவிரமாகவும், சட்டப்பூர்வ மாகவும் செய்யும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற் றும் மறு குடியமர்த்தல் சட்டம் 2013 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் நில உரிமையாளர்களுக்கு மேலும் பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு திருத்தங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டுள் ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம், கனிம வளங்களைக் கொள்ளையடித்தல், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுதல், அந்நிய கம்பெனிகளுக்கு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக ஆதிவாசி மக்கள் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்புகளிலிருந்தும் வெளியேற்றப் படுகின்றனர்.
வன உரிமைச் சட்டம் 2006
“பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் (காடு களின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 “ டிசம்பர் 13, 2006 அன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது. இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் அரசிதழில் வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தை முறையாக அமல் படுத்தினால் வனநிலங்களில் பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு அந்நிலத்தின் மீது உரிமைகள் வழங்கப் படும். வனத்தில் விளையும் வன சிறு மகசூல் சேகரிப்பது, விற்பது மக்களின் உரிமையாகும்.
வேட்டையாடுவதைத் தவிர பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமே இயற்றப்பட்டாலும், அதைத் தருவதற்கு அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டு காலத்தில் சட்டம் எந்த லட்சணத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட விபரங்கள் அம்பலப்படுத்துகிறது.இச்சட்டப்படி 2014 ஏப்ரல் 30வரை உரிமை கோரி வரப் பெற்ற மனுக்கள் 37,61,250 இந்த மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு பட்டா மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டது 14, 35, 113 மட்டுமே. பெரும் பகுதியான மனுக்கள் தகுதியற்றது எனக்கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் அமல்படுத்தப் படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்! ஆம்! சென்னை உயர்நீதி மன்றத் தில் நிலுவையிலுள்ள வழக்கை காரணம் காட்டி, சட்டம் அமல்படுததப்படாமலேயே உள்ளது.
வழக்கை விரைந்து முடிக்கவும் அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை.ஆதிவாசி மக்கள் வன சிறு மகசூல் சேகரிப்பதையும், ஆடுகள் மேய்ப் பதையும், வனத்துறையினர் தடுத்து வருகின்றனர். ஒப்பந்தக்காரர்களிடம் பல ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு விரோதமாக பழங் குடியினர் அல்லாதார் சேகரித்து விற்பனை செய்கின்றனர். போராட்டங்களின் மூலம் சில மலைகளில் ஆதிவாசி மக்கள்சேகரித்து விற்றாலும் அதற்கு கட்டுப்படி யான விலை கிடைப்பதில்லை. மாநில அரசுகள் வன சிறு மகசூல்களுக்கு குறைந்தபட்ச விலை தீர்மானிப்பதுடன், கொள் முதல் செய்வது, சந்தை உத்தரவாதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பட்டியல்படுத்துதலும்- இனச் சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளும் :
பழங்குடியினர் பட்டியல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பிரச்சனைகள் நீடிக்கின்றன. ஒரு மாநிலத்தின் பழங்குடி பட்டியலில் இருப்பவர் வேறொரு மாநிலத்தில் வேறுபட்டியலில் வைக்கப்பட் டுள்ளார். ஒரு மாநிலத்திலேயே ஒரு மாவட்டத்தில் பழங்குடியாக இருப்பவர் வேறொரு மாவட்டத்திற்கு சென்றால் ஏற்க மறுக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் நரிக்குறவர், ஈரோடு மாவட்ட மலையாளி குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரி வினர், புலையன் ஆகிய இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை 1980 முதல் வற்புறுத்தப்பட்டு வருகிறது.
இந்திய பதிவாளர் துறையும், மத்திய அரசும் சிறுசிறு காரணங்களைக் காட்டி, திருப்பி அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையில் பழங்குடியினராக இருந்தும் பழங்குடியினருக்குரிய உரிமை களையும் சலுகைகளையும் பெற முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். பல தலைமுறைகள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் குறித்த பிரச்சனை யைக் கவனிப்பதற்கென்று தேசிய அள வில் தனி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.மற்றொன்று, ஏற்கனவே பட்டியலில் உள்ள பழங்குடியினர் சான்றிதழ் பெறுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் காலங் கடத்துவது, மனுக்களை திருப்பி அனுப்புவது, வருடக்கணக்கில் அலைய விடுவது போன்ற தந்திரங்களைக் கையாளுகின்றனர்.
பழங்குடி சான்றிதழ் கோருபவர்கள் அனைவருமே போலிகள்என்ற முறையில் இந்தப் பிரச்சனைஅணுகப்படுவதே அடிப்படைப்பிரச்சனை. இந்த சோதனைகளையெல் லாம் கடந்து சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் அமர்ந்துவிட்டால் மெய்த் தன்மைஅறிதல் என்ற பெயரில் வாழ்நாள் முழு வதும் விசாரணையை எதிர்கொள்வதுடன், அவமானத்துக்கும் உள்ளாக நேரிடுகிறது. ‘ஏன் பழங்குடி சமூகத்தில் பிறந்தோம்’என்றே நோகின்றனர்.
எனவே, சான்றிதழ் பெறும் வழி முறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். மானிடவியல் பயின்றவர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்துவது குறித்து அரசு யோசிக்க வேண்டும். 2014 மார்ச் மாதம் வரை சுமார் 2,00,000 சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள அனைத்து பழங்குடியினருக்கும் குறிப் பிட்ட காலவரையறை தீர்மானித்து சான் றிதழ் வழங்க வேண்டும்.
அரசின் நிதி ஒதுக்கீடுகளும் – திட்டங்களும்
அரசியல் சாசனத்தில் குறிப்பிட் டுள்ளபடி “பழங்குடிகளின் நலுனுக் கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்“ என்ற கடமை யை நிறைவேற்றும் வகையில் 1979ம் ஆண்டு சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு 2007ம் ஆண்டு “பழங்குடியினர் துணைத் திட்டம்” என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மக்கள் தொகை சதவீதத்திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. வலுவான போராட்டங்கள், தொடர் வற்புறுத்தல் களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி முழுமையாக செலவழிக்கப்படாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
திட்டங்களும் அதிகாரிகளின் அக்கறை யின்மை, முறைகேடு, ஊழல் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பழங்குடியினர் துணைத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் மக்களி டையே கலந்துரையாடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.ஆதிவாசி மக்கள் இன குழுக்களின் எண்ணிக்கையை விட அவர்களுக்கான பிரச்சனைகள் அதிகம் என்பதை அனைவரும் அறிவர். ஒரு சில முக்கிய பிரச்சனைகள் மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை, பசி, நிலமின்மை, கல்வியின்மை, வேலையின்மை, உரிமை யற்றவர்கள் ஆகியவற்றின் மொத்த உருவமாகவும், இதில் முதலிடத்திலும் ஆதிவாசிகள் இருந்து வருகின்றனர். எனவே, ஆதிவாசி மக்களை விழிப்படையச் செய் வோம். அவர்களுக்கு `உணர்த்துவதே’ அடிப்படை பணி. அவர்களைக் காணும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல் நம்மால் ஆனதைச் செய்வோம்!
No comments:
Post a Comment