1974-ல் தொடங்கிய காவிரி நீர்ப் பிரச்சனையில் காவிரி டெல்டா மாவட்ட
விவசாயிகளின் தொடர்ச்சியான-வலிமையான போராட்டங்களால், இடதுசாரிகள் ஆதரவோடு அமைந்திருந்த தேசிய
முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் காவிரி நடுவர் மன்றம்
அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் மூலம் கர்நாடகம், தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின்
காவிரிப் பாசன விவசாயிகளின் நியாயமான தண்ணீர்த் தேவையை அறிந்து, 1992-ல் இடைக்காலத்
தீர்ப்பு வழங்கப்பட்டு, 2007-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், உடனடியாக மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு
அமைக்க வேண்டும் என்று கூறியும், மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக மறுத்து வருகிறது. இந்தாண்டு வடகிழக்குப்
பருவமழையும் இதுவரை பெய்யாமல் காவிரி டெல்டா விவசாயிகள், ஏழை எளிய விவசாயிகள் சாகுபடி செய்த
பயிர் கருகி வருவதைக் கண்டு, அதிர்ச்சியுற்று, மனமுடைந்து மாரடைப்பாலும் தற்கொலை செய்துகொண்டும் மாண்டு
போகிறார்கள்.
இயற்கைச் சீற்றங்கள், வெள்ளம் வந்தாலும் வறட்சி வந்தாலும்
புயல் வந்தாலும் சுனாமி வந்தாலும் கொள்ளை நோய்கள் வந்தாலும் மக்களைப் பாதுகாக்க
வேண்டிய மத்திய-மாநில அரசுகள், வாய்மூடி மௌனிகளாக இருப்பது நியாயமானது இல்லை.இதுவரை நாகை
மாவட்டத்தில் மட்டும் ஏழை எளிய விவசாயிகள் 10 பேர் மாண்டுள்ளனர் என்பது அதிர்ச்சியாக
உள்ளது. குடும்பத் தலைவரை, தலைவியை இழந்து வாடும் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம், சாகுபடி செய்த நிலத்திற்கு ஏக்கர்
ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாத்திடக் கேட்டுக்
கொள்கிறோம்.
A.இருதயராஜ், மாவட்டச் செயலாளர், BSNLEU, தஞ்சாவூர்
மாவட்டம்