Monday, 6 November 2017

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மாநாடு மதுரை பிரகடனம்

சாதி பாகுபாடு மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகிய கொடுமைகள் ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கங்களால் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்படுகிற ஒரு போராகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூரமான கட்டமைப்பு நீடிப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் முழுமையான ஆதரவும் உதவியும் செய்து வருகின்றன. கடந்த காலங்களில் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக பெருமளவில் போராட்டங்கள் நடந்துள்ளன என்ற போதிலும், இன்றைக்கும் மனிதம் என்ற மாண்புக்கு எதிராக பெரும் அச்சுறுத்தலாக இந்தக் கொடுமைகள் நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதற்கு எதிரான போராட்டங்கள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
சாதிய அமைப்பு முறையை வேரோடு ஒழிப்பதற்கான போராட்டத்தில், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், சாதியப் பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; சமூக நீதிக்கான போராட்டத்தை கட்டவிழ்த்துவிடுவதில், அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது இருக்கிறது. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவா எனும் வரையறையோடு, சாதி ரீதியான சமூகத்தை முதன்மைப்படுத்துவது என்ற நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து உந்தித் தள்ளப்படுகிறது. இதன் மூலம் சமூகத்தை ஒரு முழுமையான சாதிய சமூகமாக சீரழிக்கும் நிலை உருவாக்கப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ், இத்தகைய சாதி வெறி சக்திகளும், பிற்போக்குவாத சக்திகளும் ஊக்கம் பெற்று ஆட்டம் போடுகிற நிலை தீவிரமடைந்திருக்கிறது. மதவாத மற்றும் சாதிய தாக்குதல்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன. சாதி அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன; சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்பவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு உள்ளாகிறார்கள். நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் பலவும் தலித் மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிற இடங்களாக மாறியுள்ளன. ஜனநாயக சூழல் என்பது அழிக்கப்பட்டு வருகிறது. பன்முக தன்மை வாய்ந்த கலாச்சார கூறுகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு வருகின்றன. கொடுமைகளை எதிர்த்து கேள்வி எழுப்பும் அறிவுஜீவிகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
இத்தகைய கொடுமைகள் நிகழும்போது, இதுபற்றிய முழுமையான உண்மைகளை வெளியிடவிடாமல், ஊடகங்கள் ஒடுக்கப்படுகின்றன. மக்களின் மனங்களை மதவெறிமயமாக்குகிறது. சாதி வெறிமயமாக்குகிற தங்களது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் விதத்தில் ஊடகங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. நவீன தாராளமயம் மற்றும் உலகமய சக்திகள் தங்களது சுரண்டலை மேலும் மேலும் தீவிரப்படுத்தவும், அதன் மூலம் லாபத்தை மேலும் மேலும் அதிகரிக்கவும் இத்தகைய சாதிவெறி-மதவெறி கட்டமைப்புகளோடு ஒத்துழைக்கவும் இணைந்து செல்லவுமே விரும்புகின்றன. பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசாங்கம், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்கள் பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கைகளையே இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது; அதோடு, பழைய நிலப்பிரபுத்துவ சாதிய கட்டமைப்பை மீண்டும் நிறுவுவதற்கு முழுமையான ஆதரவினை அளித்து வருகிறது.
இந்திய நாட்டின் மக்கள் நடத்திய மாபெரும் போராட்டங்களின் விளைவாக நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ள இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அடித்தளங்கள் படிப்படியாக நொறுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு கூடிக் குலாவிய- அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த ஆர்எஸ்எஸ் - மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் வாரிசுகளான ஆர்எஸ்எஸ், அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கு இந்த நாட்டை மதவெறி-சாதிவெறி பாதையில் கொண்டு செல்கிறார்கள். இத்தகைய சக்திகளை தோற்கடிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து நிற்பதற்கான தருணம் இது. நாசகர சக்திகளை தோல்வியுறச் செய்து, நமது தேசத்தை சாதியும் வர்க்கமும் இல்லாத ஒரு சமூகமாக மாற்றுவதை நோக்கிய பாதையில், முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான தருணம் இது. அந்த லட்சியத்தை எட்டுவதற்கு நமது மக்களின் கரங்களில் ஒரு ஆயுதமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்சுழலட்டும். தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் இரண்டாவது அகில இந்திய மாநாடு நாடு முழுவதும் உள்ள தலித் மக்களையும் இதர அனைத்துத் தரப்பு மக்களையும் சாதியற்ற - வர்க்கமற்ற நீதி மிகுந்த சமூகத்தை உருவாக்குவதற்கான போராட்டங்களில் அணி திரளுமாறு அறைகூவி அழைக்கிறது.
இலக்குகளை அடைவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் அமைப்புகளும் ஒத்துழைப்பான முறையில் செயல்படுவோம் என இந்த மாநாடு உறுதியேற்கிறது. அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் இந்த முழக்கங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிலும் குரல் எழுப்ப வேண்டுமென்று மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் இந்த முழக்கங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது. எதிர்வரும் பட்ஜெட் அமர்வுகளில் மேற்கண்ட கோரிக்கைகளை உரத்து ஒழிக்கும் விதத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுபட்டு மிகப்பெரும் போராட்டங்களை நடத்தவும் மாநாடு அழைப்பு விடுக்கிறது. நீதிக்காக போராடுவோம் என்ற முழக்கத்துடன் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களும் ஒன்றுபட்டு கரம் கோர்ப்போம் என தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி மாநாடு பிரகடனம் செய்கிறது

No comments:

Post a Comment