Friday, 6 March 2015

சர்வதேச மகளிர் தினம்

           தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.
           ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
           அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.
           பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.
           1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
           1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.
           1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப்  பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.
           1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களை வாழ்த்துவதுடன் நில்லாமல் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் வர்க்க உணர்வுடன் கைகோர்க்க BSNLEU அறைகூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment