Monday, 10 February 2014

வறுமைக்கோடு என்றால்...?
என்.பகத்சிங்
அண்மையில் குஜராத் அரசின் இணையதளத்தில் வறுமைக்கோடு குறித்த செய்திஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாள்ஒன்றுக்கு ரூ.10.80க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்றும், நகரங்களில் மாத சராசரி வரு மானம் ரூ.501 வரை உள்ளவர்களும் கிராமங்களில் மாத சராசரி வருமானம் ரூ.324 வரைஉள்ளவர்களும் அந்தோதயா யோஜனா திட்டத்தின்கீழ் பயனடைவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய திட்டக்குழு 2012ல் அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கான வரையறை கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.32 சம்பாதிப்பவர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.38 என்றும் வரையறுத்துள்ளது. இரண்டு கணக்கீடுகளுமே பொய்யான அளவீடு என்பதுதான் உண்மையிலும் உண்மை.வறுமை என்றால் வயிற்றுப் பசியைத் தீர்க்க முடியாமல் இருக்கும் நிலை என்று பொதுவாக அறியப்பட்டாலும், ஐ.நா.சபையும், உலக வங்கியும் வறுமைக்கு உலகளாகிய விளக்கங்கள் தருகின்றன. ஒவ்வொரு ஆணுக்கும் தினசரி 2,500 கலோரிகள் சக்தி கொடுக்கும் உணவு அவசியத் தேவை, பெண்களுக்கு 2000 கலோரிகள் தேவை. இந்தளவுக்கு கலோரிகள் கொடுக்கும் உணவு, சுத்தமான தண்ணீர், உடை, உறை விடம், அடிப்படை மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் ஆகியவை இல்லாதவர்கள். வறுமையில் வாடுபவர்கள் என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளும் வரையறை.
வறுமைக்கோடு வரையறைகள்
வறுமைக்கோட்டுக்கான அளவீடு முதன் முதலில் 1878ல் தாதாபாய் நவ்ரோஜியால் அறிமுகமானது. “ இந்தியாவில் வறுமையும், பிரிட்டிஷ் ஆட்சியும்“ என்ற தனது அறிக் கையில் வறுமைக்கோடு பற்றி தெளிவாக முன்வைத்துள்ளார். 1876-77ஆம் ஆண்டில் விலைவாசியின் அடிப்படையில் கூலித் தொழிலாளர் பயணம் செய்யும்போதும், ஓய்வில் இருக்கும் போதும் ஒரு நபருக்கு வருடம் ஒன்றுக்கு ரூ.16லிருந்து ரூ.35வரை வருமானம் கிடைக்காவிட்டால் அவரை வறியவர் என்று கணக்கிட்டிருந்தார் தாதாபாய்.1939ல் வறுமையை கணக்கிடுவதற்கு காங்கிரஸ் கட்சி நேரு தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் செயலாளர் கே.டி.ஷா அளித்த அறிக்கையில் வறுமைக் கோட்டின் அளவீடாக ஒரு மாதத்திற்கு தனிநபர் வருமானம் ரூ.15லிருந்து 20 வரை மதிப்பிட்டிருந்தார். வயது வந்த தொழிலாளி ஒருவருக்கு 2,400லிருந்து 2,800 கலோரி வரை கிடைத்தால்தான் அவர் வறுமையிலிருந்து தப்பித்தவர் என கருத வேண்டுமென அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சுதந்திர இந்தியாவில்
1960-61ல் பிதம்பர்பந்த் தலைமையிலான திட்டக்கமிஷன் வறுமைக்கோட்டை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.20 என்றும் நகர்ப்புறங்களில் ரூ.25 என்றும் நிர்ணயம் செய்தது. அதாவது இரண்டாம் உலகப்போரின் போதும் அதனை தொடர்ந்து வந்த பணவீக்கங்களுக்கு பிறகும் வறுமைக்கோட்டை அதே அளவில் (22 ஆண்டுகளுக்கு பிறகும்) முடிவு செய்திருந்தார்கள். இந்த கணக்கீட்டிலிருந்தே காங்கிரஸ் அரசின் வறுமைக்கோடு ஏமாற்று அளவீடுகளை நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
ஏமாற்று வேலை
1979ல் வறுமையை கணக்கிட திட்டக்கமிஷன் நியமித்த பணிக்குழு, தேசிய மாதிரிகணக்கீட்டுத்துறையின் புள்ளிவிவர அடிப் படையில், நாளொன்றுக்கு ஒரு தனிநபருக்கு கிராமப்புறங்களில் 2,400 கலோரிகளும், நகர்ப்புறங்களில் 2,100 கலோரிகளும் தேவைப்படுவ தாக குறிப்பிட்டது. அத்துடன் 1973 - 74 விலைவாசியின் அடிப்படையில் ஒரு நாளைக்கு கிராமப்புறங்களில் நபர் ஒருவருக்கு ரூ.49 நகர்ப்புறங்களில் ரூ.56 தேவை என்று முடிவுசெய்தது. அதாவது 1979ஆம் ஆண்டு வறு மையை கணக்கிட 1973-74 ஆம் ஆண்டு விலைவாசியை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இன்னொரு ஏமாற்று வேலையாகும். இதிலிருந்து 1973-74ஆம் ஆண்டின் விலைவாசிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் விலை வாசி குறியீட்டு எண், பணவீக்கத்தின் அளவுபோன்ற அடிப்படையில் வறுமையின் அள வீடு நிர்ணயிக்கப்படுகிறது.அதுபோல 1973-1993 வரை தேசியமாதிரி கணக்கீட்டின் ஆய்வு முடிவுகளுக்கும், தேசிய கணக்கியல் புள்ளி விபரங்களின் (NAS) முடிவுகளுக்கும், இடையிலான வேறுபாட்டை கொண்டு திட்டக்கமிஷன் வறுமை யில் உள்ளவர்களின் எண்ணிக்கையை சமன்படுத்தி (Adjust)வந்தது. அதாவது தேசிய மாதிரி ஆய்வில் மக்கள் பொருட்களை நுகரும் அளவு மதிப்பிடப்படும். அதேபோல தேசிய கணக்கியல் துறை நாட்டின் மொத்தநுகர்வை கணக்கிடுகிறது. இந்த இரு துறை களின் கணக்கீடு முறைகளில் எதில் நுகரும் அளவு குறைவாக உள்ளதோ, அந்தளவுக்கு மற்றொரு துறையின் அளவையும் வெட்டி சுருக்கி, இரண்டு துறை புள்ளிவிபரங்களையும் ஒரே அளவினதாகவே பார்த்துக் கொள்கிறது மைய அரசு. இத்தகைய பொய்யான, பூடக புள்ளிவிபரம் கொண்டே வறுமைக்கோடு தீர்மானிக்கப்படுகிறது.
வறுமையின் அளவீடு குறைப்பு
1993 - 94ல் தேசிய மாதிரி ஆய்வைவிட கணக்கியல் துறையின் மதிப்பீடுகள் குறைவாக இருந்ததால் நாட்டின் வறுமை சத வீதம் கணிசமாக குறைந்துவிட்டதாக கணக் கிட்டது. அதாவது 1987-88ம் ஆண்டு 25சதவீதமாக இருந்த வறுமை 1993-94ல் 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் புதிய தாராளமய கொள் கைகள் தீவிரமாக அமலான காலமாகும். 1994ல் திட்டக்குழு தலைவராக இருந்த திருமது தண்டவதே இந்த மோசடி கணக் கீடுகளை அம்பலப்படுத்தி இந்த போலியான மோசடி வழிமுறையை தூக்கி எறிந்தார்.
கமிட்டிகளின் அறிக்கைகள்
2001-02ல் அர்ஜூன் சென்குப்தா தலை மையிலான மரபுசாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கள் தொகையில் 77 சதவீதம் பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் ஈட்டி வறுமையில் உழல்வதாக தெரிவித்தது. என்.சி.சக்சேனா தலைமையிலான குழுவோ இந்தியாவில் 60சதவீதம் மக்கள் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கிறது. 2004-2005ல் சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டிவறுமைக்கோட்டின் அளவை தனிநபர் வருமானம் மாதம் ஒன்றுக்கு கிராமப்புறங் களில் ரூ.356.30, நகர்ப்புறங்களில் 538.60 என நிர்ணயித்தது. இது 1878ல் தாதாபாய் நவ் ரோஜியின் மதிப்பீட்டிலிருந்து 188 மடங்காகும்.
இடைப்பட்ட 127 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் ஆண்டுக்கு 5சதவீதத்திற்கும் மேல்இருக்கும், விலைவாசியும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதன்படி கணக்கிட்டால் 2004-05ல் டெண்டுல்கர் கமிட்டியின் அள வீடு பெரும் மோசடியாகும். தாதாபாய் வார்த்தை களில் சொல்வதானால் இந்த வருமானத்தைக் கொண்டு ஒருவர் உயிர்வாழவே முடியாது. இந்தக் கமிட்டி இன்னொரு மோசடியையும் செய்துள்ளது. அதாவது இந்தியாவின் பெரும்பாலான மக்கள் 1700 கலோரிக்கும் குறைவாகத்தான் உணவு உட்கொள்கிறார்கள். அதனால் முந்தைய கணக்கீடான 2100-2400 கலோரிகள் மிக அதிகம் என்று வறுமையின் அளவை கிராமப்புறங்களுக்கு 1999கலோரி என்றும் நகர்புறங்களுக்கு 1770 கலோரி என்றும் குறைத்து வரையறை செய்தது. இதனால் 2004-05ல் 37.2 சதவீதமாக இருந்த நாட்டின் வறுமை 2009-10ல் 29.8 சதவீதமாக குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 2011-12ல் மேலும் குறைந்தது 27.88 சதமாக உள்ளதாக மைய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தாராளமயத்தின் விளைவுகள்
உலகமயமாக்கலுக்குப்பிறகுதான் இந்த வறுமைக்கோடு குறித்த கணக்கு அதிகளவு முக்கியத்துவம் பெறுகிறது காரணம் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியின் அளவை இத்தகைய கணக்கெடுப்புகள் தீர்மானிக்கின்றன. தாராளமய கொள்கைகளில் வறுமை ஒழிப்பு திட்டங் களுக்கு நிதி ஒதுக்கிய விபரங்கள் தெரிவிக்கப் பட்டால்தான். உலகநிதி மூலதனம் அந்நிய முதலீடுகளை இங்கு அனுமதிக்கும் என்றஏற்பாடுகள் புதிய தாராளமயக் கொள்கை களில் இருப்பதால்தான், இந்த பொய்யான, பூடக புள்ளிவிபரங்களை வைத்து குஜராத் அரசும், மைய அரசும் வறுமைக்கோட்டை அளவீடு செய்கின்றன. உண்மையில் வறுமை குறித்த அக்கறை இவர்களுக்கு இல்லை. அந்நிய முதலீடுகள் இங்கே நுழைந்தால் ஏற்படும் பாதிப்புகள் தனிக்கதை.
மருத்துவ அறிவியலின்படி
ஓய்வில் இருக்கும் ஒருவருக்கு உட லின் வளர்சிதை மாற்றத்திற்கே 1,220 கலோரிதேவைப்படுகிறது. 10 வயது முதல் 17வயதுள்ள சிறார்களுக்கு சராசரியாக 2,450கலோரியும், 10வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கு 1,360 கலோரியும், கருத்தரிக்கும் பெண்களுக்கு சராசரியைவிட 350 கலோரிகள் அதிகமாகவும், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு சராசரியை விட 600 கலோரிகள் அதிகமாகவும் தேவைப்படும். மருத்துவ அறிவியலின்படி உண்மை இவ்வாறிருக்க வறுமைக்கோடு பற்றி காங்கிரசும், பாஜகவும் உண்மைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவது, உலக கார்ப்பரேட்களையும் நிதிமூலதனத்தையும், உலக வங்கியையும் திருப்திபடுத்தலாம். ஆனால் இந்தியாவின் ஏழை, எளிய மக்களை திருப்திபடுத்தாது. மட்டுமல்லாமல் ஏகடியம் செய்வதாகவும் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான பதிலை இந்திய மக்கள் நிச்சயம் இவர்களுக்கு வழங்குவார்கள்.

No comments:

Post a Comment