Wednesday 25 December 2013

வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!வெண்மணி தியாகிகள்

வெண்மணி தியாகிகள் வீர வணக்க நாள் ஞாபகங்கள் தீ மூட்டும்!


டிசம்பர் 25, 2013. வெண்மணியின் 45-வது தினம். தேசத்தையே குலுக்கிய நாளது. 44 தலித் மக்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை நிலச்சுவான்தார்களும், அவர்களது குண் டர்களும் உயிரோடு எரித்துக் கொன்ற நாள். அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட் டத்தில், குறிப்பாக கிழக்கு தஞ்சையில் பெரும்பகுதியாக இருந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் நிலச்சுவான்தாரர்களால் விலங்கு களிலும் இழிவாக நடத்தப்பட்டனர்.
சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன. செங்கொடி இயக்கம்தான் அவர்களை தலைநிமிர வைத்தது. தோழர் பி.சீனிவாசராவ் உள்ளிட்ட பொதுவுடமை இயக்க தலைவர்கள் வலுவான போராட்டங்களை நடத்தினர். கூலி உயர்வுக்காக மட்டுமின்றி, சமூக நீதிக்காகவும் சமரசமற்ற போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் வயல்களில் குனிந்தே கிடந்த சேற்று மனிதர்கள் தலைநிமிர்ந்தார்கள். ஆனால் இதனை ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்திருந்தனர்.அவர்கள் நடத்திய கோரத் தாண்டவம்தான் இன்றளவும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் வெண்மணியில் பற்றவைக்கப்பட்ட நெருப்பாகும்.ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர் பகுதிகளில்) விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்தலைமையில் போராடினார்கள்.
பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் (நிலச்சுவான்தார்கள் சங்கம்) குண்டர்கள் வெண்மணி கிராமத்திலுள்ள விவசாயத்தொழிலாளர்/தலித் மக்களை கொடூரமாகத் தாக்கினர். தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத 44 தலித் மக் கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ராமையாவின் குடிசைக்குள் நுழைந்தனர். நிலச் சுவான்தாரின் குண்டர்கள் அந்த குடிசைக்கு வெளியில் தாளிட்டு, குடிசைக்கு தீயிட்டு 44 பேரையும் கோரமாக உயிரோடு கொளுத்தினர். அந்த நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெண்மணி வீரவணக்க நாளாக அனுஷ்டித்து வருகிறது. வெண்மணியில் தலித் மக்களை தாக்குகிற போது, இங்கு பறந்து கொண்டிருக்கும் செங்கொடியை இறக்கி விட்டு நெல் உற்பத்தி யாளர்கள் சங்கக்கொடியை ஏற்றினால் நீங்கள் கேட்கும் கூலியைத் தருகிறோம் என நிலச்சுவான்தார்களின் குண்டர்கள் மிரட் டினார்கள்.
எங்களது உயிரே போனாலும் பரவாயில்லை தலித் மக்கள் மனிதர்களாக நிமிர்ந்து வாழ, தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கப் போராடிய இந்த செங்கொடியை இறக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லைஎன தலித் மக்கள் உறுதியாக நின்றனர். இதற்குப் பிறகுதான் அந்த கோரச் சம்பவத்தை கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நிலச்சுவான்தார்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் அரங்கேற் றினார்கள். வெண்மணி கிராமம் உள்ளிட்டு, நாகை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அக்காலத்தில் நடந்த போராட்டம் கூலி உயர்வுக்காக மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவச்சுரண்டலுக்கும், தீண்டாமை ஒழிப்புக்குமான போராட்டமாகத்தான் அது நடந்தது. நிலச்சுவான்தார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தையும் அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தோழர் மைதிலி சிவராமன் 1970-ஆம் ஆண்டு கீழத்தஞ்சையில் தலித் விவ சாயத் தொழிலாளர்களையும், சில மிராசு தாரர்களையும் பேட்டி கண்டு எழுதிய கட்டு ரையில் வெண்மணி தலித் மக்கள் மீது நிலச்சுவான்தார்கள் தொடுத்த தாக்குதலின் பின்னணியை தெளிவாகக் கொண்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் அமைதியாக இருந்தது. விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாகத்தான் உழைத்து வந்தார்கள். என் வீட்டிற்கு கொல்லைப்புறமாக வந்து எங்களோடு அச்சத்தோடு பேசி வந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது செருப்பணிந்து வீட்டிற்கு முன் புறமாக வந்து நிற்கிறார்கள். சரியாக மாலை 5 1/2 மணிக்கு எங்கள் தலைவர் பேசுகிறார், கூட்டம் நடைபெறுகிறது, நாங்கள் செல்கிறோம் என்று சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள்.என்னுடைய வீட்டிற்கு அருகாமையிலேயே செங் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கூட்டம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஆணவம் வந்து விட்டது. எங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான்” - என தோழர் மைதிலி சிவராமனிடம் வெண்மணிக்கு அருகிலுள்ள ஆலத்தம்பாடி கிராமத்தைச் சார்ந்த ஒரு மிராசுதாரர் பேட்டியின் போது கூறியிருக்கிறார்.
ஆணவம் தலித் மக்களுக்கு அல்ல, நிலச் சுவான்தார்களுக்குதான் என்பது மேற்கண்ட பேட்டியில் தெளிவாகிறது.மேற்கண்ட நிலச்சுவான்தார் அளித்த பேட்டியிலிருந்தே வெண்மணி மக்கள் மீதான தாக்குதலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். 1940-களில் துவங்கி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒட்டுமொத்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடி வருகிறது. சாதிக் கொடுமைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற வீரமிக்க இயக்கத்தை ஒடுக்க வேண்டுமென்பதே நிலச்சுவான்தார்களின் நோக்கம். நிலச்சுவான்தார்களின் நலன் களுக்கு ஆதரவாக நின்ற அன்றைய மாநில அரசு, இத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கவில்லை. வெண்மணியில் தலித் மக்களை தாக்கி உயிரோடு கொளுத்தினால் செங் கொடி இயக்கம் அழிந்து விடும் என நிலச் சுவான்தார்கள் மனப்பால் குடித்தார்கள்.
ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், செங்கொடி இயக்கமும் முன்பைவிட முனைப்பாக செயல்பட்டு வருகிறது. வெண் மணித் தீயில் வெந்த அந்த 44 கண்மணிகள் தீண்டாமை ஒழிப்புக்கான/ நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் தியாகிகள் ஆனார்கள். இன்றும் தமிழகத்தில் ஏன் நாடு முழுவதும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், தீண்டாமைக் கொடுமையும் பல வடிவங்களில் நீடித்து வருகின்றன.தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இணைந்து போராடியதால்தான் கிழக்குத் தஞ்சை மாவட்டத்தில் ஓரளவு உரிமைகளை பெற முடிந்தது. வர்க்க ரீதியாக உழைக்கும் மக்கள் அணிதிரண்டதால்தான் அது சாத்தியமானது. ஆனால் இன்றைக்கு தலித் மக்களுக்கு எதிராக சில சாதி சங்கத்தலைவர்கள் அணிதிரளும் அவலக் காட் சியை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்துப் பகுதி மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, எளியமக்களை சாதியின் பெயரால் மோத விடும் சதி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
கிராமப்புறங்களில் விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. விவசாயம் நலிந்து ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பிழைப்புக்காக நகரங் களை நோக்கி குடிபெயர்ந்து செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்து மக் கள் தொகையில் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களில் பாதிப்பேர் தலித் மக்கள். மீதி பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதி வித்தியாசம் இல்லாமல் விவசாயத் தொழிலாளர்களும், விவசாயிகளும் விவசாயத்தைப் பாதுகாக்க, விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாக்க, தீண்டாமை ஒழிப்புக்காக, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக போராட வெண்மணி தினத்தில் சூளுரைப்போம்.
நன்றி தீக்கதிர்

No comments:

Post a Comment