Saturday 6 December 2014

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

அண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்!

அண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்!
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழு…”
-இந்தியாவின் தன்னிகரற்ற அறிவுச் சுடர், ஏழைப் பங்காளன், தீண்டாமை எனும் கொடுந் தீயிலிருந்து தன் மக்களை ஒரு தாயாய் நின்று காத்த தலைவன் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் புகட்டிய உணர்வு இது!
இன்று அண்ணலின் 121-வது பிறந்த நாள்! அவர் வரலாற்றை ஒரு முறை படிப்பவர்கள், சாதிய பேதங்களுக்கப்பால் புதிதாய் பிறந்ததாய் உணர்வார்கள்!
மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்ததால் அவர், இளம் வயதில்பட்ட துன்பங்கள் எழுத்தில் வடிக்க முடியாதவை. மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், சாதி இந்துக்கள் எனும் பெயரில் அப்படியொரு அடக்குமுறை நிகழ்ந்த காலம் அது.
டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.
அந்த நிகழ்வு அவர் மனதில் மிகப் பெரிய வைராக்கியமாக உருவெடுத்தது. தனக்கு மட்டுமல்ல, ஒரு பெரிய கூட்டத்துக்காக தாம் போராட வேண்டிய கடமை இருப்பதாக மனதில் வரித்துக் கொண்டு, தன் சிந்தனை முழுவதையும் அதிலேயே செலுத்தினார் அண்ணல்.
நிகரற்ற கல்வி மேதை
இந்தியாவில் டாக்டர் அம்பேத்கருக்கு நிகரான கல்வியாளர் யாருமில்லை. பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

1917-ல் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் தனது பிஎச்டி படிப்பை மேற்கொண்டார். ஆனால் பரோடா அரசின் உதவித் தொகை நின்றதால், நாடு திரும்ப நேர்ந்தது. ஆனால் அம்பேத்கருக்காக அந்த கல்வி நிறுவனம் ஒரு சிறப்புச் சலுகை தந்தது. அவர் மீண்டும் வந்து ஆய்வைத் தொடங்க அனுமதித்தது.


நாடு திரும்பிய பின் அம்பேத்கர் பெரும் சிரமங்களுக்கு உள்ளானார். பரோடா
பரோடா சமஸ்தானத்தில் பாதுகாப்புச் செயலர் பதவியை அவருக்கு அளித்தார்கள். ஆனால் அங்கு நிலவிய தீண்டாமைக் கொடுமை அவரை பணியாற்ற விடவில்லை.

சீக்கிரமே பதவியை உதறினார். தன் அன்றாட வாழ்க்கைக்காக பல வேலைகளைச் செய்தார். டாக்டர் பட்டம், இரு முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு மாபெரும் கல்வியாளர், ஒரு கணக்கெழுத்தராகக் கூட பணியாற்றினார். ஆனால் அப்படியும் கூட அந்த வேலைகள் நிலைக்கவில்லை. இவர் ஒரு ‘மகர்’ என்று தெரிந்த பிறகு அத்தனை வாடிக்கையாளர்களும் ஓடிப் போனார்கள்.
மும்பையின் சைடன்ஹாம் கல்லூரியில் அண்ணலுக்கு பேராசிரியர் வேலை கிடைத்தது. மாணவர்களுடன் அவர் ஓரளவுக்கு அனுசரித்துப் போய்விட்டார். ஆனால் சக பேராசிரியர்கள் காட்டிய தீண்டாமை துவேஷத்தை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இத்தனை கஷ்டங்களையும் தாண்டி, அவர் மீண்டும் பிரிட்டன் சென்றார். பசி, பட்டினியைப் பொருட்படுத்தாமல் படித்து லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் பிஎச்டி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் வென்றார்.
சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டம் வென்றவர். ஆய்வுகள் மேற்கொண்டு அதிலும் டாக்டர் பட்டம் பெற்றார் அம்பேத்கர்.
1926-ல் ‘பிராமணர்கள் இந்தியாவை எப்படி பாழ்படுத்தினார்கள்’ என்ற ஒரு பிரசுரத்துக்காக பிராமணரல்லாத மூன்று தலைவர்கள் மீது சில பிராமணர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அந்த மூன்று தலைவர்களுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வென்று காட்டியவர் அம்பேத்கர்.

எதையும் எதிர்கொண்ட களப் போராளி

யாருக்கும் அஞ்சாதவராக, தன் கொள்கையில் உறுதி மிக்கவராக வாழ்ந்த தலைவர் அம்பேத்கர். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.
வெறும் உபதேசத்தை நம்புபவரல்ல அவர். உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அண்ணலின் சௌதார் குளப் போராட்டமும் ஆலய நுழைவுப் போராட்டங்களும் அவர் எத்தகைய தீரமான களப் போராளி என்பதற்கு சான்றுகள்.
பசுவின் நெய்யை பயன்படுத்தியதற்காக, ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்ட போது, தானும் களத்திலிருந்து அந்தக் கொடுமையை அனுபவித்தவர்.
காந்தியை விமர்சித்த நேர்மையாளர்
காந்தியடிகளை முகத்துக்கு நேரே விமர்சித்த ஒரே தலைவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், ‘என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். அவரது வாதத்தை ஏற்று ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்கும் அளிக்கும் ‘இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் இதனை காந்தியடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலித்துகளை தனியாகப் பிரிக்க வேண்டாம் என அவர் எதிர்த்தார்.

கண்ணெதிரில் தம் இன மக்கள் உரிமை பறிக்கப்படுகிறதே என்ற கோபத்தில், “தலித் என்பவனுக்கு நீங்களாக எந்த உரிமையும் தரமாட்டீர்கள். கிடைக்கும் உரிமையையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியாது… அப்படித்தானே,” என்றார் அம்பேத்கர் கோபத்துடன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என வலியுறுத்தி காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 – 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே ‘புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்போது அம்பேத்கரை பாரதத்தின் புதல்வர் என்றார் காந்தியடிகள். அப்போது அம்பேத்கர் சொன்ன வார்த்தைகள்:
“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அப்படி ஒன்றில்லை. நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி. யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது. ஆனால் எங்கள் மக்களுக்கு தனி அந்தஸ்து கிடைப்பதை உங்களால் ஏற்க முடியவில்லை. என்றாலும் உண்ணாவிரதமிருந்து நீங்கள் சாவதை விரும்பவில்லை. நான் வருகிறேன்…”
1931-ல் காந்தியடிகளுக்கு இந்த தேசத்திலிருந்த செல்வாக்கைப் புரிந்தவர்கள், மீண்டும் ஒருமுறை மேற்கண்ட வரிகளைப் படித்துப் பாருங்கள்! அம்பேத்கரின் அதிகபட்ச நேர்மைதான், அவரது இந்த விமர்சனத்துக்குக் காரணம்.
காந்தியின் உண்ணாவிரதத்துக்காக மட்டும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளவில்லை அம்பேத்கர். இந்த உண்ணாவிரதத்தால், உயர்சாதிக்காரர்கள் தலித் மக்களை கூண்டோடு படுகொலை செய்யும் அளவுக்கு வன்மத்தோடு வெறியாட்டம் போட ஆரம்பித்திருந்தனர். வேறு வழியின்றி, உரிமையை பகிரங்கமாக விட்டுக் கொடுத்து, அந்த வலியுடன் பொருமிச் சொன்ன வார்த்தைகள் இவை!
பாபா சாகேப் அம்பேத்கரின் Who is the Shudras? (The Untouchables: A Thesis on the Origins of Untouchability) ஒவ்வொரு சூத்திரன் மட்டுமல்ல, உயர்சாதிப் பெருமை பீற்றிக் கொள்பவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.

உண்மையான பெண்ணியவாதி

நேரத்தைக் கொல்ல பெண்ணியம் பேசியவர்களுக்கு மத்தியில், பெண்களின் உரிமைகளுக்கான வேலைகளைச் செய்து முடித்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக, சட்டத்தை வகுத்தபோதே பெண்களுக்கு சிறப்பு உரிமைகளைத் தருவதற்கான பிரிவுகளை அவர் ஏற்படுத்திவிட்டார்.
அரசியல், சமூகம், பொருளாதார தளங்களில் பெண்களுக்கு சம உரிமையை அவர் உறுதிப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உருவாக்கி சமூக ஏற்றத்தாழ்வு நீங்க வழி செய்தார். பிற்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீடுகளுக்கும் அவரே காரணமானார்.
பேசாப் பொருளை பேசியவர்
அம்பேத்கரின் துணிச்சல் அன்றைய இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. மதத்தின் பெயரில் நிகழ்த்தப்பட்ட அத்தனை கொடுமைகளையும் சாடியவர் அவர். இந்து மதத்தில் மட்டுமல்ல, இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கு எதிரான விஷயங்களை அவரைப் போல வேறு யாராவது விமர்சித்திருப்பார்களா தெரியவில்லை!
பாகிஸ்தான் பிரிந்து செல்லட்டும் என்ற கருத்தை தைரியமாக முன்வைத்தவர் அவர் ஒருவர்தான். “எப்போது முஸ்லிம்கள் தனி நாடு விஷயத்தில் இத்தனை தீவிரமாக உள்ளார்களோ… அவர்களுக்கு பாகிஸ்தானை அங்கீகரித்துவிடலாம். நாளை முஸ்லிம் நாடுகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அன்றைக்கு இந்திய ராணுவத்தில் உள்ள முஸ்லிம்கள் உண்மையாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இந்தியாவும் அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கும். அவர்களை அங்கீகரித்து தனி நாடாக்குங்கள்”, என்று வெளிப்படையாகவே சொன்னவர்.
தூக்கமற்ற உழைப்பு…
ஒரு நாளில் நான்கு மணி நேரங்களைக் கூட தூக்கத்துக்கென்று ஒதுக்காத மனிதர் அவர். எப்போதும் எழுத்து, படிப்பு, தன் இன விடிவுக்கான சிந்தனையிலேயே அவர் காலம் கழிந்தது. இந்த தூக்கமற்ற உழைப்பே அவருக்கு நீரிழிவு நோயை பரிசாக அளித்தது.
அப்படியும் கூட அந்த மனிதர், தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. “என் இறுதிக் காலம் நெருங்குகிறது.. ஆனால் என் மக்களின் துயரங்களுக்கான இறுதிக் காலம் ரொம்ப தூரத்திலிருக்கிறதே… என்னால் எப்படி வேளைக்கு உண்டு, உறங்கி காலம் தள்ள முடியும்?” என்பது தன்னைக் கவனித்த மருத்துவரிடம் அவர் எழுப்பிய கேள்வி!
1954-ல் அவர் கண் பார்வையைப் பறித்தது நீரிழிவு. பார்வை போய்விட்டதெனக் கூறி பரிதாபம் தேடவில்லை அந்த மகாத்மா. இன விடியலுக்கான அரசியல் போரைத் தொடர்ந்தார். தன் மூச்சு நிற்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூட The Buddha and His Dhamma என்ற புத்தகத்தை எழுதி முடித்திருந்தார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து பல்வேறு பொருளாதாரத் தடைகளைக் கடந்து வெளிநாட்டில் படித்து, ஒரு மாபெரும் நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியதுடன் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக, விடிவெள்ளியாக இன்றும் திகழ்பவர் அம்பேதகர்.
“பாதாளம் வரை அழுத்த முயன்ற பல்லாயிரம் கரங்களை சுட்டுப்பொசுக்கி சுடர்விட்ட அறிவுச் சூரியன்.. பேரறிஞர்.. சாதியம் ஓய்வதில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு வடிவங்களில் கொடுமையைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கும் என்பதை கணித்து தீர்வெழுதிய மாமேதை” என்ற போற்றுதலுக்குரியவர் அம்பேத்கர்.
குலத்தால் தாழ்ந்தவன் என்ற சொல்லைப் போக்கும் மாமந்திரம் கல்விதான் என்ற பெரும் உண்மையை தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியவர் அம்பேத்கர். ‘கல்வி என்ற ஆயுதத்தை கைக்கொள்… உலகம் உன்னை உயர்த்தித் தொழும்’ என்ற அவர் சித்தாந்தம்தான் ஒரு இனத்தையே படிப்பின்பால் உந்தித் தள்ளியது.

கற்பி – ஒன்று சேர் – கலகம் செய் என்பது அம்பேத்கரின் அடிப்படைத் தத்துவம்.

“வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்,” என்ற மாமேதை, பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தார்.
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை,” என்பதுதான் அண்ணலின் நம்பிக்கை.
தலித், மகர் என்ற வரையறைக்கப்பால், ஒவ்வொரு இளைஞனுக்கும் வழிகாட்டியாகத் திகழ்பவர் ‘பாரத் ரத்னா’ அண்ணல் அம்பேத்கர்!
குறிப்பு 1: அண்ணலின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பு. அம்பேத்கரை அப்படியே பிரதியெடுத்தமாதிரி, வாழ்ந்திருப்பார் மம்முட்டி.
குறிப்பு 2: சென்னையில் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபம் ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment